

பெய்ஜிங்: தடையற்ற வர்த்தகத்தின் ஆதரவாளர்களான சீனாவும் பிரிட்டனும் இணைந்து உண்மையான பன்முகத்தன்மை உறவை ஆதரித்து செயல்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் ஒருவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. பெய்ஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது: சர்வதேச சட்டங்களை அனைத்து நாடுகளும் மதித்து கடைபிடித்தால் மட்டுமே அவை உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக, பெரிய நாடுகள் இதில் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தவறினால், உலகம் மீண்டும் காட்டாட்சி சட்டத்தின் பிடியில் சிக்க நேரிடும். சீனாவைப் பொருத்தவரை அது எவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தாலும், மற்ற நாடுகளுக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது. இவ்வாறு ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
சீன அதிபருடனான சந்திப்பு குறித்து லண்டனில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் சீரான, நீண்டகால மற்றும் வியூக ரீதியிலான கூட்டாண்மையை உருவாக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். கருத்து வேறுபாடுகள் உள்ள துறைகளில் வெளிப்படையான பேச்சுவார்த்தையைத் தொடர அவர்கள் ஒப்புக்கொண்டனர். பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்த சந்திப்பின்போது உடன்பாடு எட்டப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.