

ஃப்ளாவியோ போல்சனாரோ
லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) அதிபர் தேர்தல் நடந்தது. இதில் இடதுசாரி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான இனாசியோ லூலா டா சில்வா, முன்னாள் அதிபரின் மகனும், வலதுசாரி வேட்பாளருமான ஃப்ளாவியோ போல்சனாரோ களம் கண்டனர்.
பிரேசில் முதற்கட்ட அதிபர் தேர்தலின் முடிவின்படி ஃப்ளாவியோ போல்சனாரோ 47.03% வாக்குகள் பெற்றுள்ளார். அதிபர் லூலா டா சில்வா 45.16% வாக்குகள் பெற்றுள்ளார். எந்த வேட்பாளரும் 50% பெரும்பான்மை பெறாத நிலையில், இருவருக்கும் இடையே வரும் அக்டோபர் 25 அன்று இறுதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவரே பிரேசிலின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பிரேசில் அதிபர் தேர்தல் முடிவுகள் உலகளவிலும் குறிப்பாக அமெரிக்காவாலும் உற்று நோக்கப்படுகிறது. காரணம், லத்தீன் அமெரிக்கா முழுவதும் வலதுசாரி அலை வீசி வருவதாகக் கருதப்படும் நிலையில், பிரேசிலை அந்தப் போக்கில் சேராமல் இடதுசாரி அதிபரால் தடுக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பது.
லூலா வெற்றி பெற்றால், மெக்சிகோவை போல லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் பிரேசில் ஒரு முக்கிய இடதுசாரி கோட்டையாக தொடரும். ஃப்ளாவியோ போல்சனாரோ வெற்றி பெற்றால், வலதுசாரி நோக்கி நகரும் அலையில் அந்நாடு இணையும்.
ட்ரம்ப் வெற்றிக்குப் பின்னால்...
2025 ஜனவரியில் அமெரிக்க அதிபரானார் டொனால்டு ட்ரம்ப். அதன்பின்னர் லத்தீன் அமெரிக்காவின் நாடுகளில் நடந்த தேர்தல்களில் வலதுசாரி, பழமைவாதி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
ட்ரம்ப் ஆதரவு கொள்கை கொண்ட அபெலார்டோ டே லா எஸ்ப்ரியெல்லா கடந்த ஆகஸ்ட் மாதம் கொலம்பியாவின் அதிபராக பதவியேற்றார்.
பெரு நாட்டின் அதிபராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த கெய்கோ ஃபுஜிமோரி (Keiko Fujimori) ஜூலை, 2026-ல் பதவியேற்றார். இவர் முன்னாள் அதிபர் ஆல்பெர்டோ ஃபுஜிமோரியின் மகளாவார்.
அர்ஜென்டினா அதிபராக சேவியர் மிலே கடந்த 2023-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னதாக 4 ஆண்டுகளாக கொலம்பியாவின் அதிபராக இருந்தவர் தீவிர ட்ரம்ப் எதிர்ப்பாளர். அமெரிக்க குடியேற்ற விதிகள், போதைப்பொருள் எதிர்ப்புக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர். இந்தச் சூழலில், சேவியர் மிலே வெற்றி ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
அடுத்ததாக ஈகுவேடார். ஏப்ரல் 2025-ல் டேனியல் நொபோவா அந்நாட்டு அதிபரானார். அவரது ஆட்சியின் கீழ், ஈகுவேடார் ராணுவம் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஈகுவேடாரில் அமெரிக்க ராணுவ தளத்தை மீண்டும் திறக்க முயன்றார் நொபோவா. ஆனால், கடந்த ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில் அந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்டது.
கடந்த நவம்பரில் நஸ்ரி அஸ்ஃபுரா, ஹோண்டுராஸ் நாட்டின் அதிபரானார். ரியல் எஸ்டேட் முதலீட்டாளரும், தேசியக் கட்சியின் முன்னாள் நகர மேயருமான அஸ்ஃபுரா, போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டு பின்னர் ட்ரம்ப்பால் மன்னிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டஸின் கட்சியைச் சேர்ந்தவர். அந்நாட்டு தேர்தலுக்கு முன்னர், அஸ்ஃபுரா அதிபராக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், ஹோண்டுராஸுக்கு உதவியை நிறுத்துவதாக ட்ரம்ப் மிரட்டிய நிலையில், 1%-க்கும் கீழான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
பழமைவாதியும் தீவிர கத்தோலிக்கருமான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட், டிசம்பர் 2025-ல் சிலி அதிபர் ஆனார். அதற்கு முன்னர் நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முற்போக்கு அரசாங்கத்தை அவர் தோற்கடித்தார்.
கடந்த பிப்ரவரியில் லாரா ஃபெர்னாண்டஸ் கோஸ்டா ரிகா நாட்டில் அதிபரானார். முன்னாள் அதிபர் ரோட்ரிகோ சாவேஸின் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் பொருளாதாரத் துறை அமைச்சராக இருந்தவர்.
இப்படி லத்தீன் அமெரிக்க நாடுகளில் 7-ல் வலதுசாரி, குறிப்பாக ட்ரம்ப் கொள்கைகளை ஆதரிப்பவர்கள் அதிபராக இருக்கின்றனர்.
வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் முடிவு!
இந்நிலையில், பிரேசில் தேர்தலில் வெற்றி பெறுபவரால் பிரேசிலின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படும்.
ஃப்ளாவியோ போல்சனாரோவின் தந்தையும் தீவிர வலதுசாரி முன்னாள் அதிபருமான ஜார் போல்சனாரோ, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தீவிர கூட்டாளி. ஃப்ளாவியோ வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் நெருங்குவார்.
7-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் 80 வயது லூலா வெற்றி பெற்றால், சீனாவுடனான பிரேசிலின் உறவுகளை வலுப்படுத்துவார்.
ட்ரம்ப் நிர்வாகம் வரிகள், பிற கெடுபிடிகள் மூலம் பிரேசிலின் விவகாரங்களில் தலையிடுவதாக லூலா தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார். போல்சனாரோ ட்ரம்ப்பை ஒரு நெருங்கியக் கூட்டாளியாக பார்க்கிறார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் வாஷிங்டனுடனான உறவுகள் வலுப்படும் எனக் கூறுகிறார்.
லூலா வெற்றி பெற்றால், பிரேசில் - சீனா நெருக்கத்தை தடுக்க வரி விதிப்பு அச்சுறுத்தலை அமெரிக்கா கையில் எடுக்கும் என்கின்றனர் சர்வதேச விவகாரங்கள் நிபுணர்கள்.
சீனாவுக்குப் பிறகு பிரேசிலின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளி அமெரிக்கா தான். அப்படியிருக்க, போல்சனரோ வெற்றி பெற்றால் அமெரிக்காவுடனான பிரேசிலின் ஒத்திசைவு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
லத்தீன் அமெரிக்காவின் 17 நாடுகளில் நடத்தப்பட்டு, தி எகானமிஸ்ட்-டில் வெளியிடப்பட்ட பிரத்யேக கருத்துக் கணிப்பு, ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா குறித்த லத்தீன் அமெரிக்கர்களின் பார்வை மோசமடைந்துள்ளதாகக் கூறுகிறது.
அமெரிக்காவுக்கு சாதகமான கருத்தைக் கொண்டவர்களின் பங்கு 2024-ல் 73 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாகக் குறைந்ததாக, செப்டம்பர் 30, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
இனாசியோ லூலா டா சில்வா
வரலாற்று ரீதியாக அமெரிக்க ஆதரவு கொண்ட பிராந்தியத்தில் முதன்முறையாக, லத்தீன் அமெரிக்கர்கள் அமெரிக்காவின் செல்வாக்கைவிட சீனாவின் செல்வாக்கைச் சிறந்ததாகக் கருதுவதாக அந்தக் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியது.
நான் உயிருடன் இருக்கும் வரை பிரேசிலில் வலதுசாரிக்கு இடமில்லை என்று லூலாவும் சூளுரைத்தார்.
ஆனால், முதற்கட்ட அதிபர் தேர்தல் முடிவில் எந்த வேட்பாளரும் 50% பெரும்பான்மை பெறாத நிலையில், அக்.25 இரண்டாம் கட்டத் தேர்தலே வெற்றியை தீர்மானிக்கப் போகிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் 7 நாடுகளில் வலதுசாரி ஆட்சி அமைந்திருக்க, அந்த வெற்றிப் போக்கு லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளதாகவும் கணிக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிர்வாகமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘டான்ரோ கோட்பாடு’ ( Donroe Doctrine) என்ற புதிய கொள்கை, மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
19-ம் நூற்றாண்டில் அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கைகளை கட்டமைக்க மேற்கொண்ட மன்றோ கோட்பாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாக ‘டான்ரோ கோட்பாடு’ இருக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகம் கூறி வருகிறது.