

டாக்கா: வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து. பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மானை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் தெரிவித்தார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்களில் பிஎன்பி உறுதியான வெற்றியைப் பெறுவதில் தாரிக் ரஹ்மானின் தலைமையை நீங்கள் பாராட்டியதற்கு மிகவும் நன்றி. வங்கதேச மக்கள் எங்கள் தலைமை மீதும் ஜனநாயக நடைமுறைகள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை இந்த முடிவு பிரதிபலிக்கிறது.
பரஸ்பர மரியாதை, பரஸ்பரம் கவலைகளுக்கு செவிசாய்த்தல் மற்றும் நமது பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வழிநடத்தப்படும் நமது பன்முக உறவை மேம்படுத்த இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.