

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சாந்தோம் தேவாலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. | படங்கள்: ம.பிரபு |
சென்னை: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிறிஸ்தவ மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளுநர் ஆர்.என்.ரவி: இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும், போதனைகளும் அன்பு, இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகிய காலத்தால் அழியாத மதிப்புகளைப் பேண நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. இந்தப் புனிதப் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியைக் கொண்டு வரட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக அரசு என்றுமே சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் இருக்கும். எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின் படிதான் என்றுமே இந்த ஆட்சி தொடரும்.
இயேசுபிரான் காட்டிய அன்பு வழி மற்றும் சகோதரத்துவம் ஆகிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் அனைத்து சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள கதீட்ரல் தேவாலயம்
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: இயேசுவின் போதனைக்கு ஏற்ப, ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அன்பு தவழவும், அமைதி நிலவவும், சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் உளமார்ந்த வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: சகோதர மனப்பான்மையோடும், மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவர்கள் அனை வருக்கும் வாழ்த்துகள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இந்தியாவின் மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க உறுதி கொள்வோம். அன்பையும் பரிவையும் கனிவையும் நேசத்தோடு சக மனிதர்களிடம் பிரதிபலிக்கும் உணர்வுடன் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இயேசு கிறிஸ்துவின் வழியில் வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, இன்புற்று, வளமுடன், நலமுடன் வாழ கிறிஸ்துமஸ் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: அன்பு என்ற ஒன்றையே வாழ்வின் நெறியாகக் கொண்டு, அனைத்து உயிர்களையும் நேசி, பகைவர்களிடத்திலும் அன்பு காட்டு போன்ற இயேசுபிரானின் போதனைகளைப் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற் போம்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா: இந்த புனித நாளில் அன்பையும், அமைதியும், நமக்கு போதித்த இயேசு பிரானை பிரார்த்திப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், பாஜக நிர்வாகி சரத்குமார், வி.கே சசிகலா, முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் நாகூர் ராஜா, தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்ஜிகே நிஜாமுதீன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.