டாக்கா: மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டம், தசார் பாரா கிராமத்தைச் சேர்ந்த தேயிலை விவசாயி தீபங்கர் கோபே, 2 நாட்களுக்கு முன்பு சவுல்ஹாட்டி எல்லை வேலியில் இருந்து 150 அடி தூரத்தில் தனது தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுமார் 20 பேர் கொண்ட கும்பல் அவரை சிறைப்பிடித்துச் சென்றது்.
அந்தக் கும்பல், கோபேவை சர்வதேச எல்லையைத் தாண்டி வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்துக்கு, 2 நாட்களுக்கு முன்பு, சவுல்ஹாட்டி எல்லைப் பகுதியில் கம்பி வேலியை வெட்டி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்கதேச நபர் ஒருவரை, எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சிறை பிடித்துள்ளனர்.
இதற்கு பழிவாங்கும் வகையிலேயே கோபே கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கோபே பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர் தமிஸ் உத்தீனை இந்தியா விடுவித்தால், தானும் விடுவிக்கப்படுவேன் என்று பேசியுள்ளார். கோபேவை விடுவிக்க எல்லைப் பாதுகாப்பு படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் இந்தியா-வங்கதேச எல்லையோர கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.