

நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்ற பாலேந்திர ஷாவை இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்தார். படம்: பிடிஐ
காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் சர்மா ஒளி பதவி விலகினார். இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றார். அவரது தலைமையில் கடந்த 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.
கடந்த 12-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நேபாள நாடாளுமன்றத்தில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடி தேர்தல் மூலமும் மீதமுள்ள 110 இடங்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதன் படி இளைஞர்களின் ஆதரவு பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சி (ஆர்எஸ்பி) 182 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.
இதையடுத்து தலைநகர் காத்மாண்டுவில் நேற்று புதிய அரசு பதவியேற்றது. இதில் ஆர்எஸ்பி கட்சியின் தலைவர் பாலேந்திர ஷா (35) பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். வேத, சனாதன நடைமுறைகளின்படி பதவி யேற்று விழா நடைபெற்றது. புதிய பிரதமர் பாலேந்திராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.