

புதுடெல்லி: பணமோசடி தடுப்பு மற்றும் தீவிரவாத நிதியுதவி தடுப்பு (ஏஎம்எல்/சிடிஎப்) அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வருகிறது.
இந்த கண்காணிப்பு அமைப்பின் நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டம் வரும் அக்டோபரில் நடைபெற உள்ளது. இதில், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை ‘சாம்பல் பட்டியலில்' (Grey List) சேர்ப்பது மற்றும் ஏற்கெனவே இப்பட்டியலில் உள்ள நாடுகளை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் விடுவிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் ஏற்கெனவே சாம்பல் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. எனினும், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தான் 'சாம்பல் பட்டியலில்' இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானை மீண்டும் 'சாம்பல் பட்டியலில்' கொண்டுவர இந்தியா முயன்று வருகிறது.
இதன்படி, அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள எப்ஏடிஎப் கூட்டத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கான வீடியோ மற்றும் இதர ஆதாரங்களை சமர்ப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.