

டெஹ்ரான்: பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் கண்காணிப்பு அமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய போர், இதுவரை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ஈரானின் வான்பரப்பில் அமெரிக்க ட்ரோன்கள் தொடர்ந்து அத்துமீறி நுழைந்ததற்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் கண்காணிப்பு அமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஈரான் பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ ஊடகமான செபா நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “புரட்சிகர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான போர் ட்ரோன்கள் இன்று (நேற்று) காலை பஹ்ரைனில் உள்ள ஷேக் இசா விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படையினரால் இயக்கப்படும் ரேடார் கண்காணிப்பு அமைப்பைக் குறிவைத்து தாக்குதலை நடத்தின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பஹ்ரைனில் நேற்று அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈரான் ஒரு புதிய விதியை அறிவித்தது.
ஈரானில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டு உள்கட்டமைப்புகளை அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தாக்கினால், பதிலடியாக அந்த நாடுகளின் ராணுவத் தளங்களுக்கு அருகில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்பாட்டு உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தது.