

சென்னை: தமிழகத்தில் இருந்து கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட விதி 3-ஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து அதை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தின் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் போன்ற பணிகளுக்கு தேவையான கருங்கல், ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை மாதம் புதிதாக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு விதி 3-ஏ புதிதாக சேர்க்கப்பட்டது.
அதன்படி பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்கால் தவிர்த்து வெளி மாநிலங்களுக்கு கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் கடந்த அக்.26-ல் உத்தரவிட்டார்.
தமிழக அரசின் புதிய விதி சேர்ப்பு மற்றும் அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மது பிரேமநாதன் உள்ளிட்ட பலர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக தமிழக புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட விதி 3-ஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து அதை ரத்து செய்தனர். மேலும் அந்த விதியின் அடிப்படையில் தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.