

தாகா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாஜேத் ஜாய்க்கு வங்கதேச சிறப்பு தீர்ப்பாயம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 1,400 பேர் இறந்தனர். இந்த கலவரத்தால் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அதன் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால ஆட்சி நடைபெற்றது.
மாணவர் போராட்டத்தின் போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அடக்குமுறையை கையாண்டதால் 1,400 பேர் இறந்ததாகவும், இது மனித நேயத்துக்கு எதிரான குற்றம் என்பதால், இதற்கு காரணமான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அப்போதைய உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் கமல் ஆகியோருக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் கடந்த மாதம் மரண தண்டனை விதித்தது.
ஷேக் ஹசீனாவின் ஆலோசகராக பணியாற்றிய அவரது மகன் சாஜிப் வாஜேத் ஜாய் தற்போது அமெரிக்காவில் உள்ளார். மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வங்கதேச சிறப்பு தீர்ப்பாயம் தற்போது கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.