கோவை: சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவு காரணமாக கோவையில் நேற்று 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, அகமதாபாத் போன்ற உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று முன்தினமும், நேற்றும் சில விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: விமானத்தில் பயணிகள் தவிர்த்து விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் ஆகியோர் கொண்ட குழு ‘கேபின் க்ரு’ என்று அழைக்கப்படும். சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ‘கேபின் க்ரூ’ தொடர்பாக புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி ‘கேபின் க்ரூ’விற்கு ஏற்கெனவே 36 பணி நேரம் ஓய்வு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சில விமான சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விமானிகள், பணிப்பெண்கள் தயாராக உள்ள போதும் புதிய விதிமுறையால் அவர்களால் பணி செய்ய முடியவில்லை. கோவை விமான நிலையத்தில் சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு 5 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.