

டாக்கா: வங்கதேசத்தில் 10 நாட்கள் இடை வெளியில் மற்றொரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தேசிய மக்கள் கட்சித் தொண்டர்கள் நாடு முழுவதும் மீண்டும் வன்முறை, கலவரத்தில் ஈடு பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2009 முதல் 2024-ம் ஆண்டு வரை வங்கதேசப் பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்தார். கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் அவர் பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த நாட்டில் 2026 பிப்ரவரி 12-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளன. இந்த கட்சி பொதுத்தேர்தலை முதல்முறையாக எதிர்கொள்கிறது. மேலும் வங்கதேச தேசியக் கட்சி, வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் களமிறங்கி உள்ளன.
மாணவர் தலைவர் ஹாடி கொலை: இந்த சூழலில், கடந்த 12-ம் தேதி இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவரும், டாக்கா-8 தொகுதியின் வேட்பாளருமான ஷெரீப் உஸ்மான் ஹாடி மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.
அவரை சுட்டதாக சந்தேகிக்கப்படும் பைசல் கரீம் என்பவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து தேசிய மக்கள் கட்சித் தொண்டர்கள், வங்கதேசம் முழுவதும் வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சிறுபான்மையினரான இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மைமன்சிங் மாவட்டம் பலுகா பகுதியை சேர்ந்த தீபு சந்திர தாஸ் (30) அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மேலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் வீடுகள், அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தலைநகர் டாக்காவில் செயல்படும் சில ஊடக நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நாடாளுமன்ற வளாகம் உட்பட ஏராளமான பொது சொத்துகள் சூறையாடப்பட்டன.
இந்நிலையில், வங்கதேசத்தின் 3-வது பெரிய நகரான குல்னாவில் தேசிய மக்கள் கட்சி சார்பில் பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சியின் மூத்த தலைவரும் மாணவர் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான மொடாப் சிக்தர், கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
குல்னாவில் உள்ள சிக்தரின் வீட்டில் நேற்று மதியம் நுழைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். “சிக்தரின் இடது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அதனால், மிகப்பெரிய பாதிப்பு இல்லை. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று வங்கதேச போலீஸார் தெரிவித்தனர்.
ஹாடியை தொடர்ந்து, மற்றொரு மாணவர் தலைவரான சிக்தர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது வங்கதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘யூனுஸ் அரசை கவிழ்ப்போம்’: இதற்கிடையே, டாக்காவில் செய்தியாளர்களிடம் இன்கிலாப் மஞ்சா மாணவர் அமைப்பின் செயலாளர் அப்துல்லா அல் ஜாபர் நேற்று கூறும்போது, “ஹாடி கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு அல்லது பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் மூலம் கொலை வழக்கை விசாரிக்க வேண்டும். எங்கள் தலைவரின் மரணத்துக்கு நீதி கிடைக்காவிட்டால், யூனுஸ் அரசை கவிழ்ப்போம்’’ என்றார்.
திவாலை நோக்கி வங்கதேசம்: வங்கதேச நிலவரம் குறித்து அந்த நாட்டின் அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: பாகிஸ்தான், சீனா, அமெரிக்காவின் கைப்பாவையாக முகமது யூனுஸ் அரசு செயல்படுகிறது. மர்ம நபர்களின் திடீர் தாக்குதல்களால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அச்சமடைந்து உள்ளனர். ஏராளமானோர் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர். வன்முறை காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.
கடந்த 2014-ல் போராட்டம் காரணமாக வங்கதேசத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்தது. தற்போது மீண்டும் அதுபோன்ற போராட்டங்கள் வெடித்திருப்பதால், நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான தொழில்களான ஜவுளி, தோல் பொருட்கள், காலணி உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 12 வங்கிகள் திவாலாகும் நிலையில் உள்ளன. ஏராளமான ஆலைகள் மூடப்பட்டிருப்பதால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் இலங்கையை போன்று மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை வங்கதேசம் எதிர்கொள்ளும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் விசா வழங்கும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து மேற்கு வங்கத்தில பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.