கேரளாவில் புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொலை: முதல்வர் பினராயி விஜயன் ஆவேசம்

கேரளாவில் புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொலை: முதல்வர் பினராயி விஜயன் ஆவேசம்
Updated on
1 min read

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வாளையார் பகுதியில் சத்தீஸ்கரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை ஒரு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இது அந்த மாநிலத்தில் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோவும் வெளியாகி உள்ளது.

அந்த தொழிலாளியிடம் ‘வங்கதேசத்தை சேர்ந்தவரா?’ என கேட்டு அவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்த சம்பவம் வாளையார் பகுதியில் உள்ள அட்டப்பள்ளம் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. திருட்டு குற்றச்சாட்டு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதனடிப்படையில் விசாரணை நடப்பதாகவும். திருட்டு பொருள் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி சத்தீஸ்கரை சேர்ந்த ராம் நாராயண் பாகல் என தெரியவந்துள்ளது. அவர் தாக்கப்பட்டதை அடுத்து ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்னரே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலில் காயம் இருந்ததை உடற்கூறு ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. அவரது உடலை அவரின் குடும்பத்தினர் பெற மறுத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும், ரூ.25 லட்சம் நிவாரணமாக வேண்டும் என கோரியுள்ளனர்.

“இந்த சம்பவம் கேரள மாநிலத்துக்கு அறவே பொருந்தாத ஒன்று. இது மாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஜனநாயக சமூகத்தில் இடமில்லை. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்கப்படும். உயிரிழந்தவரின் உடல் அவரது சொந்த ஊருக்கு அரசு சார்பில் கொண்டு செல்லப்படும்” என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், வருவாய் துறை அமைச்சர் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

கேரளாவில் புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொலை: முதல்வர் பினராயி விஜயன் ஆவேசம்
“உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ஓய்வு குறித்து பரிசீலித்தேன்” - ரோஹித் சர்மா பகிர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in