

வாஷிங்டன்: அமெரிக்காவின் வலிமையை மீட்டுள்ளேன் என்றும் 8 போர்களை நிறுத்தி உள்ளேன் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் கூறியதாவது: பதினொரு மாதங்களுக்கு முன்பு நான் அதிபராக பொறுப்பேற்றபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி இருந்தது. விலைவாசி உச்சத்தில் இருந்தது. மொத்தத்தில் குழப்பமான நிலை இருந்தது. அதை சரிசெய்து வருகிறேன். அமெரிக்காவின் வலிமையை மீட்டிருக்கிறேன். 10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தி உள்ளேன்.
ஈரான் அணு ஆயுத அச்சுறுத்தலை அழித்துள்ளேன். காசா போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளேன். அத்துடன் ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக் கைதியாக இருந்த மற்றும் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடலை மீட்க நடவடிக்கை எடுத்தேன். உலகெங்கிலும் இருந்து நம் நாட்டுக்குள் பலர் சட்டவிரோதமாக ஊடுருவினர். குறிப்பாக பைடன் ஆட்சியின்போது ஏராளமானோர் ஊடுருவினர்.
அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு மருத்துவம், கல்வி உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், சட்டவிரோதமாக ஊடுருவிய அவர்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்பி வருகிறேன்.
மேலும் வெளிநாட்டினரின் வருகையால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அத்துடன் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். ராணுவத்தில் பணிபுரியும் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக தலா 1,776 டாலர் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவி்ததார்.
எனக்கு பிடித்த வார்த்தை ‘வரி'
ட்ரம்ப் பேசும்போது, “என்னுடைய வெற்றியின் பெரும்பகுதி எனக்கு மிகவும் பிடித்த சொல்லான டாரிப் (வரி) மூலமே சாத்தியமானது. பல தசாப்தங்களாக மற்ற நாடுகள் நமக்கு எதிராக அதிக வரி விதித்தன. ஆனால், நான் பதில் வரி விதித்தேன். எனது பொருளாதார கொள்கையின் மைய கருவி வரிதான்.
இதன் மூலம் பல நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை நிறுவுகின்றன. எனது வர்த்தக மற்றும் வரிக் கொள்கை காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் முதலீடு குவிந்து வருகிறது. குறிப்பாக 18 ட்ரில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது” என்றார்.