

அகமதாபாத்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நகரில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆடும் லெவனில் இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவுக்கு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியாவும் வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
அகமதாபாத் நகரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும். இந்தியா இந்த தொடரை இழக்க வாய்ப்பில்லை. லக்னோவில் திட்டமிடப்பட்ட 4-வது டி20 போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணம் திரும்ப தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5-வது போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் காயாமடைந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடி இருந்தார். இந்நிலையில், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரரான கில் விளையாடாத சூழலில் சஞ்சு சாம்சனுக்கு இன்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். அவர் இந்தப் போட்டியில் ஓப்பனராக விளையாட வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அணியின் தனது இடத்தை தக்கவைப்பதற்கான அபார ஆட்டத்தை சஞ்சு சாம்சன் வெளிப்படுத்துவார் என கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்த சில மாதங்களில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்குள் ஆடும் லெவன் சிக்கல்களுக்கு இந்திய அணி தீர்வு காண வேண்டும்.