நேபாள வெள்ளத்தில் 97 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

நேபாள வெள்ளத்தில் 97 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு
Updated on
1 min read

காத்மாண்டு: நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு மத்தியில் உயிருடன் மீட்கப்பட்ட, 97 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டி நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அங்குள்ள ஒரு முதியோர் பராமரிப்பு இல்லம் இடிபாடுகளுக்குள் சிக்கியது. அந்த முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 97 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டி இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

போலீஸாரும், நேபாள ராணுவத்தினரும் சுமார் 4 மணி நேரம் போராடி, இடிபாடுகளுக்குள் இருந்து அவரை உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்டது குறித்து, மூதாட்டி குணா மாயா கூறுகையில், போரில் வெற்றி பெற்று திரும்பிய ஒரு போர் வீரரைப் போல காணப்பட்டதாகக் கூறினார்.

இதுதொடர்பான புகைப்படமும், வீடியோவும் உலகம் முழுவதும் பரவின. 97 வயதான மூதாட்டி ஒருவர் வெள்ள இடிபாடுகளுக்கு இடையே பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்ட காட்சி, நேபாள பேரழிவின் முக்கியமான காட்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், சேறும் சகதியும் படிந்த அவரது ஆடைகளும், முகத்தில் தெரியும் சோர்வும் வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன.

தற்போது போஹரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிர் பிழைப்பு, பேரழிவின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக மாறியுள்ளது.

நேபாள வெள்ளத்தில் 97 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு
ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 8-வது இடம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in