

கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் ஒவ்வோர் ஆண்டும் பல சுகாதார அவரச நிலைகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. கரோனா என்ற சுகாதார அவரச நிலை தற்போது வரை முடிவுக்கு வரவில்லை என்றாலும், இதைத் தவிர்த்து 2022-ம் ஆண்டு பல சுகாதார அவரச நிலைகளை உலக நாடுகள் எதிர்கொண்டன. இதில் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட அவரச நிலைகளின் பாதிப்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது.
எபோலா வைரஸ்: ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் செப்டம்பர் மாதம் எபோலா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் 19 பேர் எபோலா வைரஸுக்கு பலியாகி இருந்தனர். தற்போது வரை ஆப்பிரிக்காவில் உள்ள 8 நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு உள்ளது. தற்போது வரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் மரணம் அடைந்துள்ளனர். 87 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
பாகிஸ்தான் வெள்ளம்: பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் அந்நாட்டில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியது. 3 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். சுகாதார கட்டமைப்புகள் பெரிய அளவு பாதிக்கப்பட்டது. 64 லட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கி இருந்தனர். தற்போது வரை உலக சுகாதார நிறுவனம் சார்பில் பாகிஸ்தானுக்கு 3 மில்லியன் அமெரிக்கா டாலர் அளவு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
வறட்சி: ஆப்பிக்கா கண்டம் 2022-ம் ஆண்டு வறட்சியால் அதிக பாதிப்பை எதிர்கொண்டது. கென்யா, சோமாலியா, உகாண்டா, சூடான், தெற்கு சூடான், எத்தியோபியா உள்ளிட்ட நாடுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்த நாடுகளுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைக்காத காரணத்தால் நிலைமை மிகவும் மோசம் அடைந்தது. லட்சக்கணக்கான மக்கள் கடுமையான பட்டினியால் வாடினார். இதன் காரணமாக 13 மில்லியன் மக்கள் அகதிகள் ஆகினர். இந்த நாடுகளுக்கான உதவியை ஐநாவின் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து செய்தி வருகிறது.
குரங்கம்மை: குரங்கம்மை பாதிப்பை ஜூலை மாதம் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. தற்போது வரை 110 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பை கண்டறியப்பட்டுள்ளது. 82,624 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த டிசம்பர் மாதம் மட்டும 1,517 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா நாடுகளில் தான் குரங்கம்மை பாதிப்பு அதிகமாக உள்ளது.
உக்ரைன் பேர்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாக உக்ரைனில் சுகாதார வசதிகள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. உக்ரைனில் சுகாதார சேவை அளிக்கும் 715 நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதுவரை உக்ரைனில் உள்ள 8.9 மில்லியன் பேருக்கு சுகாதார வசதிகளை வழங்கி உள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் 336 டன் மருந்துகள், 11 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ளது.