

லாகூர்: பாகிஸ்தானில் படுகொலை முயற்சி ஒன்றில், துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
இம்ரான் கானுக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் பைசல் சுல்தான், என்பவர் அளித்துள்ள பேட்டியில், "இம்ரான் ஆபத்தான நிலையில் தப்பிவிட்டார். இப்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. எனினும் காலில் தோட்டாத் துண்டுகள் எஞ்சியுள்ளன. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. காலில் பாய்ந்த தோட்டா அவரின் எலும்பை துளைத்துள்ளது. அவரின் உடல்நிலை தொடர்பாக பின்னர் விரிவான அறிக்கை வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ஷௌகத் கான் மருத்துவமனை வட்டாரங்களில் வெளியான தகவலில், இம்ரான் கான் அடுத்த 3 வாரங்களுக்கு நடக்க முடியாது என்றும், மூன்று வாரங்களுக்கு முழுமையான ஓய்வு தேவைப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள ஷௌகத் கான் மருத்துவமனை. இம்ரான் கானின் அமைச்சரவையில் முன்னாள் சுகாதார அமைச்சராக பணியாற்றிய டாக்டர் பைசல் சுல்தான் தலைமையில் ஒரு மருத்துவக் குழு உருவாக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது?: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வந்தார். 6 நாட்களுக்கு முன்பு தொடங்கிய அவரது பேரணி வியாழக்கிழமை பஞ்சாப் மாகாணத்தின் வஜிராபாத் வந்தது. அவரது கட்சியின் முன்னணி தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர். இம்ரான் கான் தனது பிரச்சார வாகனத்தின் உச்சியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவரது இரண்டு கால்களிலும் 3 குண்டுகள் பாய்ந்தன. இரு கால்களிலும் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் வஜிராபாத்தில் இருந்து உடனடியாக அவர் லாகூரில் உள்ள ஷவுகத் கானும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.