

சீனாவின் பிடியில் உள்ள ஹாங்காங்குக்கு சுதந்திரம் வழங்கக்கோரி கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் ஹாங்காங்கில் நடந்த தேர்தலில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் சிக்ஸ்டஸ் லெயூங் (30) மற்றும் யாவூ வய் சிங் (25) இருவரும் முதல்முறையாக நாடாளுமன்ற எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் புதிய எம்பிக்கள் பதவி யேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட லெயூங்கும், யாவூம், சீனாவுக்கு எதிராக கோஷமிட்டதுடன், ஹாங்காங் குக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ‘‘ஹாங்காங் சீனாவுக்கு சொந்தமல்ல, ஹாங்காங் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும்’’ என்ற வாசகங்கள் அடங்கிய கொடிகளையும் ஏந்திப் பிடித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய சீனாவின் நாடாளுமன்ற நிலைக்குழு, ஜனநாயக முறைப்படி தேர்ந் தெடுக்கப்பட்ட இரு எம்பிக் களையும் தகுதி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டுள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கையால், ஹாங்காங் மக்களும், ஜனநாயா ஆதரவு போராளிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் சீனாவின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங் தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பேரணி நடத்தினர்.