

லண்டன்: பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஒரு வாரத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் சில மாதங்களுக்கு முன்பு அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் புதிய பிரதமரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. எட்டு பேர் போட்டியிட்ட நிலையில் இறுதிச் சுற்றில் லிஸ் ட்ரஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இடையே பலப்பரீட்சை நிலவியது. இதில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று கடந்த மாதம் 6-ம் தேதி புதிய பிரதமராக பதவியேற்றார்.
கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற பல்வேறு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் என்று லிஸ் ட்ரஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
அண்மையில் லிஸ் ட்ரஸ் அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்தது. இந்த விவகாரத்தில் பிரதமருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிதியமைச்சர் க்வாசி க்வார்டெங்க் சில நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தார்.
அவரை தொடர்ந்து பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், "மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்களின் நலனுக்காக மட்டுமே அரசு செயல்பட வேண்டும். சில சுயநலவாதிகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது" என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்த சூழலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை கொறடா வெண்டி மார்டன், துணை கொறடா கிரைக் வொயிட்னர் ஆகியோர் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். பெரும்பாலான அமைச்சர்களும் ஆளும் கட்சி எம்.பி.க்களும் பிரதமருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். நெருக்கடி முற்றியதால் பிரதமர் லிஸ் ட்ரஸ் நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து லண்டனில் நேற்று அவர் கூறும்போது, "மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இதுகுறித்து மன்னர் சார்லஸுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். புதிய பிரதமர் ஒரு வாரத்தில் தேர்வு செய்யப்படுவார். அதுவரை பிரதமர் பதவியில் நீடிப்பேன்" என்று தெரிவித்தார்.
இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பதவியேற்ற 45-வது நாளில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பொதுத்தேர்தலை நடத்த கோரிக்கை: இங்கிலாந்தின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் கேர் ஸ்டார்மர் கூறியதாவது: கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியில் இங்கிலாந்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மக்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பலர் ஒருவேளை உணவை தவிர்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஒருவர் புதிய பிரதமராக பதவியேற்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது. மக்களின் முடிவை அறிய உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும். மக்களின் தீர்ப்பின்படி புதிய பிரதமரை தேர்வு செய்வதுதான் ஜனநாயகத்துக்கு அழகு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.