

இத்தாலியில் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு பணியிலிருந்த இரு ராணுவ வீரர்கள் பிரசவம் பார்த்தனர்.
இத்தாலியின் தலைநகரான ரோமில் அமைந்துள்ள ரோம் சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணியளவில் இரு ராணுவ வீரர்கள் பணியிலிருந்தனர். அப்போது பெண் ஒருவரது அழுகுரல் கேட்டது.
கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் பிரசவ வலி ஏற்பட்டதால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு நடந்து சென்றார். அப்போது அந்தப் பெண்ணுக்கு கடுமையான வலி ஏற்பட, அதனைக் கண்ட ராணுவ வீரர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அந்தப் பெண் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பிரசவித்தார்.
இது குறித்து பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த ராணுவ வீரர்களில் ஒருவரான ஃப்ரான்ஸ்சிஸ்கோ மங்க் கூறும்போது, "நான் எப்படி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தேன் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எனக்குக் குழந்தைகள் கூட கிடையாது" என்று கூறினார்.
ராணுவ வீரர்களால் பிரசவம் பார்க்கப்பட்ட அந்தப் பெண் தனது குழந்தையுடன் இத்தாலியின் சிறந்த மருத்துவமனையான ஃபெட்மின் ஃப்ரடிலியில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.