

லண்டன்: கரோனா பாதித்தவர்கள் அவரவர் உடலின் எதிர்ப்பு சக்தியின்படி குணமாகும் நாட்கள் அமைகின்றன. ஆனால், இங்கிலாந்தில் ஒருவருக்கு 505 நாட்களுக்கு கரோனா தொற்று இருந்ததாகவும், இதனை மருத்துவ ரீதியாக 'சூப்பர் லாங் கரோனா பாதிப்பு' என்று தாங்கள் அழைப்பதாகவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் Guy’s & St. Thomas' NHS Foundation Trust என்ற ஆராய்ச்சி மையமானது கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு எவ்வளவு நாட்கள் அதன் பாதிப்பு இருக்கிறது. அதுவும் குறிப்பாக, இணை நோய்கள் கொண்டோரில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அதன்படி, நீண்ட காலமாக ஒருவருக்கு கரோனா தொற்று இருந்தால், அது எந்த வகையான திரிபுகளை உருவாக்குகிறது என்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்காக 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருமே 8 வாரங்களுக்கும் மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் பலரும் குறைந்த நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்கள். அல்லது எச்ஐவி, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள்; உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள். அவர்களின் பெயர் விவரம் தனிநபர் உரிமை கருதி வெளியிடப்படவில்லை.
அந்த 9 பேருக்கும் தொற்று பாதிப்பு சோதனை நடத்தியதில் சராசரியாக அனைவருக்குமே 73 நாட்களுக்கு கரோனா இருந்தது உறுதியானது. அதில் இரண்டு பேருக்கு ஓராண்டுக்கும் மேலாக தொற்று இருந்தது. குறிப்பாக, ஒரு நபருக்கு 505 நாட்கள் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு முன்னதாக 335 நாட்களாக கரோனா தொற்றுடன் இருந்த நபரே அதிக நாட்களாக கரோனா தொற்றுடன் இருந்தவராக கண்டறியப்படிருந்தார்.
இந்த ஆய்வு குறித்து ஆராய்சிக் குழுவின் மருத்துவர் லூக் ப்ளாக்டன் ஸ்னெல், "பெர்சிஸ்டன்ட் (விடாப்பிடி) கரோனா என்பது லாங் கரோனாவைவிட (நீண்டகால) வித்தியாசமானது. லாங் கோவிட் தொற்றாளர்களில் வைரஸ் உடலில் இருந்து வெளியேறிவிட்டாலும் கூட அறிகுறிகள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் பெர்சிஸ்டன்ட் (விடாப்பிடி) கரோனா பாதிப்பின்போது வைரஸ் திரிபு நிலைகளை அடையும். இந்த மாதிரியான பாதிப்பு கொண்டோரிடம் ஒவ்வொரு முறை மாதிரி சேமித்து அதை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பும்போதும் அது வெவ்வேறு திரிபாக இருக்கிறது. ஆனால், அவை பெரும்பாலும் தற்போது அறியப்பட்டுள்ள திரிபுகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கின்றன. அதேபோல் எந்த ஒரு நோயாளியின் மாதிரிகளிலும் புதிய திரிபுகளை உருவாக்கவில்லை. அதேபோல் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் வைரஸ் பரவவில்லை" என்றார்.
இதுபோன்ற விடாப்பிடி கரோனா உள்ளோருக்கான சிகிச்சைகள் விரைவில் வரும் என்று நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற தொற்று மிகவும் அரிதினும் அரிதானது. உலகளவில் நோய் எதிர்ப்பாற்றல் பிரச்சினை கொண்ட கோடிக்கணக்கானோர் உள்ளனர்; அவர்களில் எத்தனை பேர் இவ்வாறான விடாப்பிடி கரோனா தொற்று பெற்றுள்ளனர், பெறும் அபாயத்தில் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிவது அரிது, கடினம்.
ஆனால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு முகக்கவசத்துடன் செல்வது அவர்களுக்கும் நல்லது, பிறருக்கும் நல்லது என்று ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த ஹூஸ்டனைச் சேர்ந்த மருத்துவர் வெஸ்லி லாங் கூறியுள்ளார்.