

கீவ்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டு அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியுடன் நகர்வலம் வந்ததும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய தாக்குதல் கட்டற்று சென்று கொண்டிருக்கிறது, உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, போலந்து எனப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் தங்களின் உதவிகளை, ஆதரவை, நட்புக்கரத்தை நீட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் உக்ரைன் சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிக் கொண்டே அதிபர் மாளிகையிலிருந்து சிறிது தூரம் நடந்தே வந்து நகரத்தைப் பார்வையிட்டார். அப்போது மாளிகைக்கு வெளியில் நின்றிருந்த சாமான்ய மனிதர் ஒருவர் உக்ரைனிய மொழியில் ஏதோ சொல்ல அதை மொழிபெயர்த்து 'உங்களுக்கு அவர் நன்றி சொல்கிறார்' என எடுத்துரைக்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி.
உடனே அந்த நபரை நோக்கிச் செல்லும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 'உங்களுடைய அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிடத்தக்கவர். உங்களின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். நாங்கள் (இங்கிலாந்து) எல்லா உதவிகளையும் செய்வோம்' எனக் கூற அந்த நபர் நன்றி சொல்லுவது புரியாவிட்டாலும் அவருடைய உடல்மொழி போரின் வேதனையையும், உதவிக்கான நன்றியையும் தெளிவாகக் கடத்தியது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சந்திப்பு குறித்து உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "கைகுலுக்கும் இடைவெளியில் போரிஸ் ஜான்சனும், ஜெலன்ஸ்கியும் கீவ் நகரின் மையத்தில் நடந்து சென்று சாமான்யர்களை சந்தித்து உரையாடினார்கள். இதுதான் ஜனநாயகம். இதுதான் தைரியம். இதுதான் உண்மையான நட்புக்கு அடையாளம்" என்று தெரிவித்துள்ளது.
ரஷ்யா கீவ், கார்கிவ் எனப் பல்வேறு நகரங்களில் இருந்தும் வெளியேறிய நிலையில் புக்கா எனும் நகரில் 100க் கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த உடல்கள் ரஷ்யாவின் போர்க்குற்றத்தின் சாட்சி என்று உக்ரைன் கூறிவருகிறது. இதன் விளைவாக ரஷ்யா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் பிறகு கீவ் நகருக்குச் செல்லும் முதல் சர்வதேசத் தலைவராகியுள்ளார் போரிஸ் ஜான்சன்.
உக்ரைன் பயணத்தின்போது பேசிய போரிஸ் ஜான்சன், ரஷ்யர்கள் தங்கள் ராணுவ பலத்தால் உக்ரைனை ஒருசில நாட்களிலோ அல்லது சில மணி நேரத்திலேயோ முடித்துவிடலாம் எனத் திட்டமிட்டனர். அவர்கள் எவ்வளவு பெரிய தப்புக் கணக்கைப் போட்டுள்ளார்கள். உக்ரைனிய மக்கள் சிங்கம் போல் வலிமையைக் காட்டியுள்ளனர். இந்த உலகம் இவர்களைப் போன்ற ஹீரோக்களைப் பார்த்ததிலை. உக்ரைனுக்கு கப்பலை எதிர்கொள்ளும் ஏவுகணைகள், போர் வாகனங்களை நாங்கள் தரவுள்ளோம் என்று கூறினார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நான் திடீரென நேரில் சந்தித்து ஆச்சர்யப்படுத்த விரும்பினேன். அதனால் தான் இந்தப் பயணம் பற்றி முன்னரே அறிவிப்பு வெளியிடப்படவில்ல என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டுடன் இன்றும் என்றும் நாங்கள் துணையாக நிற்போம் என்று வாக்குறுதி அளித்தார்.