

மலேசியாவில் ஈப்போ, கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள இந்து கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அந்த நாட்டில் பதற்றம் எழுந்துள்ளது.
மலேசிய மக்கள் தொகையில் இந்திய வம்சாவழியினர் 8 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அங்கு தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பத்துமலை முருகன் கோயில் உட்பட ஏராளமான இந்து கோயில்கள் உள்ளன.
இந்நிலையில் பேராக் மாநில தலைநகர் ஈப்போவில் கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள முனீஸ்வரர் அம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த நவக்கிரக சிலைகளை உடைத்துள்ளார். இது மலேசிய தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தஞ்சோங் ரம்புத்தான் என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மலேசிய இந்துக்களின் கூட்டமைப் பான ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கூறியிருப்பதாவது:
கோயிலில் சிலைகளை உடைத்த நபர் ஓட்டி வந்த காரில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பேனரும் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது தனிநபரின் செயலாகத் தெரியவில்லை. ஐ.எஸ். அமைப்பின் சதித்திட்டமாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனிடையே போலீஸ் தரப்பு கூறியபோது, கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர், அவர் மனநல சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.