

வங்கதேசத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார்.
வங்கதேசத்தின் வடமேற்கில் உள்ள ராஜ்ஷாகி நகரில் ராஜ்ஷாகி பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆங்கில இலக்கிய பேராசிரியராக ஏ.எப்.எம். ரெசவுல் கரீம் சித்திகீ (58) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை பல்கலைக்கழகம் செல்வதற்கு, வீட்டில் இருந்து பஸ் நிறுத்தம் நோக்கிச் சென்றார்.
இந்நிலையில் மோட்டார் பைக்கில் வந்த இருவர் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களும் பேராசிரியர்களும் போராட்டம் நடத்தினர்.
கரிமூடன் பணியாற்றுவோர் கூறும்போது, “கரீம் முற்போக்கு சிந்தனை கொண்டவர். இது அடிப்படைவாத சக்திகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கலாம்” என்றனர்.
இதனிடையே கரீம் கொலைக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வங்கதேசத்தில் நாத்திக கொள்கைக்கு அழைப்பு விடுத்ததே அவர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்றும் அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நாத்திக கொள்கையுடைய அறிஞர்கள், வலைப்பதிவு எழுத்தாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இநிலையில், இது அவர்கள் மீது சமீபத்திய தாக்குதலாக கருதப்படுகிறது.