சீனாவுக்கு பயந்து புதிய வைரஸ் பெயர் மாற்றமா?- உலக சுகாதார அமைப்புக்கு உலக நாடுகள் கண்டனம்

சீனாவுக்கு பயந்து புதிய வைரஸ் பெயர் மாற்றமா?- உலக சுகாதார அமைப்புக்கு உலக நாடுகள் கண்டனம்
Updated on
1 min read

சீனாவுக்கு பயந்து, புதிய கரோனா வைரஸின் பெயரை உலக சுகாதார அமைப்பு மாற்றியுள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக கரோனா வைரஸ் மரபணு மாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன.

உருமாறிய கரோனா வைரஸை அடையாளப்படுத்த உலக சுகாதாரஅமைப்பு கிரேக்க எண் கணிதஅடிப்படையில் புதிய பெயர்களை சூட்டி வருகிறது. இதன்படி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என கிரேக்க எண்களின் அடிப்படையில் புதிய வகை கரோனா வைரஸ்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் புதியவகை கரோனா வைரஸ் பரவுவதுகண்டறியப்பட்டது. அந்த வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டியுள்ளது. கிரேக்க எண் கணித வரிசையில் தென்னாப்பிரிக்க வைரஸுக்கு, நியூ (Nu) என்றே பெயர்சூட்டியிருக்க வேண்டும். புதியவைரஸ் என்று அர்த்தம் வருவதால்அதனை உலக சுகாதார அமைப்புதவிர்த்துள்ளது. அதற்கு அடுத்து14-வது கிரேக்க எண்ணான ஜிசாய் (Xi) என்று தென்னாப்பிரிக்க வைரஸுக்கு பெயர் சூட்டியிருக்க வேண்டும். ஆனால் அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் (Xi jinping) பெயரும் கிரேக்க எண்ணின் பெயரும் ஒத்துப் போவதால் அதை தவிர்த்து, தென்னாப்பிரிக்க வகை கரோனா வைரஸுக்கு 15-வது கிரேக்க எண்ணான ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் முடிவுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க செனட் சபை எம்.பி., டெட் குரூஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உலக சுகாதார அமைப்பு அஞ்சுகிறது. அந்த அமைப்பை எவ்வாறு நம்ப முடியும். உலக சுகாதார அமைப்பு மீண்டும் உண்மைகளை மூடி மறைக்கக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ், எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர். சீனாவின் ஆதரவுடன் உலக சுகாதார அமைப்பின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் கரோனா வைரஸ் பரவியபோது, அந்த நாட்டு அரசு உண்மைகளை மூடி மறைத்தது.

இதற்கு உலக சுகாதார அமைப்பும் ஒத்துப் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. தற்போது மீண்டும் சீன அதிபருக்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in