

இலங்கை போர்க்குற்ற விசாரணை நடைமுறைகள் மே மாதம் இறுதியில் தயாராகிவிடும் என்று அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2015 அக்டோபரில் நடந்த ஐ.நா. சபை மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம், உள்நாட்டு விசாரணை மட்டுமே நடைபெறும் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வரும் ஜூன் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 32-வது கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக போர்க்குற்ற விசாரணை நடைமுறைகளை வரையறுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி வரும் மே இறுதிக்குள் விசாரணை நடைமுறைகள் தயாராகிவிடும், அவை மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்படும் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.