பிரேசில் அதிபர் மீதான குற்றச்சாட்டுகள்: விசாரணைக்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

பிரேசில் அதிபர் மீதான குற்றச்சாட்டுகள்: விசாரணைக்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
Updated on
1 min read

கரோனா தொற்று நெருக்கடியை மோசமாகக் கையாண்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா மீது சட்டபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள் கொண்டுவந்த பரிந்துரை நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பிரேசிலில் தீவிரமாக இருக்கும்போது அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனோரா அறிவியல் ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், கரோனா குறித்து தவறான தகவல்களை மக்களிடத்தில் பதிவு செய்துவந்தார். மேலும், கரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியமற்றது எனத் தெரிவித்தார்.

ஜெய்ர் போல்சனோராவின் இந்தக் கருத்துகளுக்கு உலக அளவில் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் ஜெய்ர் போல்சனோரா மீது பிரேசில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொலை உட்பட 13 குற்ற வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தனர்.

இந்தப் பரிந்துரை மீதான வாக்கெடுப்பு பிரேசில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் 11 பேர் அடங்கிய பிரேசிலின் நாடாளுமன்றக் குழுவில் 7 பேர் ஜெய்ர் போல்சனோரா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஒமர் அசிஸ், இந்தப் பரிந்துரையை பிரேசிலின் அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார்.

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கரோனா காரணமாக பிரேசிலில் வறுமை அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.

கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வரவேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்கெனவே கூறிவந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in