

வாருங்கள் அழலாம் என்ற பலகையுடன் மனதில் உள்ள உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்க, ஸ்பெயினில் அழுகை அறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மன அழுத்தம் சார்ந்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட் பகுதியில் 'அழுகை அறை ' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு சென்று, மனதில் உள்ள கோபம், எரிச்சல், ஏமாற்றம், தனிமை உள்ளிட்ட அனைத்து இறுக்கமான உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்க்கலாம். அறையில் நுழைபவர்கள், யாரிடம் மனம் விட்டுப் பேச விரும்புகிறார்களோ அவர்களிடம் தொலைபேசியில் அழைத்துப் பேசலாம். இங்கு, மனநல ஆலோசகரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அழுகை அறை குறித்து ஸ்வீடன் மாணவர் ஜான் லெஸ்மன் கூறும்போது, ''மன நலம் சார்ந்த பிரச்சினைகளை இவ்வாறு காட்சிப்படுத்துவது உண்மையிலேயே அருமையான யோசனை. ஸ்பெயின் மற்றும் பிற ஏராளமான நாடுகளில் அழுவது தவறான ஒன்று என்பதுபோலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக உலக மனநல தினமான அக்டோபர் 10-ம் தேதி அன்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், மனநலம் சார்ந்த விழிப்புணர்வுக்காக சுமார் 116 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.873 கோடி) தொகையைத் தனியாக ஒதுக்கினார்.
அப்போது, ''மன அழுத்தம் என்பது பேசவோ, விவாதிக்கவோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. பொது சுகாதாரப் பிரச்சினை. இதுகுறித்து நாம் முதலில் பேச வேண்டும். அதை வெளிப்படைத்தன்மை கொண்டதாக ஆக்கி, மன அழுத்தத்தைப் போக்க வேண்டும்'' என்று ஸ்பெயின் பிரதமர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.