

டெஹ்ரான்: ஈரானில் சிக்கியிருந்த 72 குஜராத் மீனவர்கள் அர்மீனியா செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஈரானின் கிஷ் தீவில் குஜராத்தைச் சேர்ந்த 72 மீனவர்கள் கடந்த 35 நாட்களாக சிக்கி இருந்தனர். இது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. மோதல் தீவிரமடைந்த போது, தங்களது பாதுகாப்புக்காகப் பல மீனவர்கள் படகுகளிலேயே முடங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படாததால் அவர்கள் ஈரானிய அதிகாரிகளை அணுகி வெளியேற அனுமதி கோரினர். இதனைத் தொடர்ந்து, சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்மீனியாவுக்குச் செல்ல 20 நாட்களுக்கான விசா அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சாலை மார்க்கமாகப் பயணத்தைத் தொடங்கினர்.
மீனவர்கள் பகிர்ந்துள்ள வீடியோக்களில், அங்குள்ள மோசமான சூழலை விவரித்துள்ளனர். நீண்ட காலப் போர் தங்களுக்கு மன உளைச்சலையும், கடும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் கையிருப்பில் இருந்த பணம் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகவும், இந்தியாவுக்குத் திரும்புவதற்கான விமானச் செலவுக்குப் பணம் இல்லை என்றும் அவர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.
அர்மீனியாவில் இருந்து தங்களை தாயகம் அழைத்துச் செல்ல இந்திய அரசு உதவ வேண்டும் என்றும், துபாய் வழியாகத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய தகவல்களின்படி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் அர்மீனியாவில் தங்கி இந்தியாவுக்கு வரக் காத்திருக்கின்றனர்.