ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்: தலிபான்கள்

ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்: தலிபான்கள்
Updated on
1 min read

ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தலிபான்கள் இன்று அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றினர். தலைநகர் காபூலும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.

அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.

பஞ்ச்ஷீர் மாகாண மக்கள் தலிபான்களை ஏற்கவில்லை. அங்கு தலிபான்களுக்கு எதிராக தீவிர சண்டை நடந்து வந்தது. பஞ்ச்ஷீர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்ததாக தலிபான்கள் அறிவித்தனர்.
முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தப்பியோடி விட்டதாக தலிபான்கள் தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து அங்கு சண்டை நடந்து வந்தது. இந்தநிலையில் ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தலிபான்கள் இன்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலிபான் தலைமைப் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:

ஆப்கன் அரசுக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய ஆட்சியில் சேர வேண்டும்.

பஞ்ச்ஷீரில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம், நம் நாடு போரின் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து முழுமையாக வெளியேறி விட்டது.

இவ்வாறு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in