

டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக சுமார் 700 டேங்க்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கி உள்ளன. இதனால் உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரான் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் கிழக்கு-மேற்கு இடையிலான 86% எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிசக்தி சந்தை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
கடற்படை பகுப்பாய்வு நிறுவனங்களான விண்ட்வர்ட் மற்றும் கெப்லர் தரவுகளின்படி, இந்த நீர்வழிப்பாதை அதிகாரப்பூர்வமாக மூடப்படவில்லை என்றாலும், நடைமுறையில் அது முடங்கியே உள்ளது.
மார்ச் 1-ம் தேதி 28 லட்சம் பேரல் எண்ணெயைச் சுமந்து சென்ற மூன்று கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்தன. இது 2026-ன் தினசரி சராசரியான 1.98 கோடி பேரல்களில் இருந்து 86% சரிவாகும். மார்ச் 2-ம் தேதி அதிகாலை நிலவரப்படி, ஒரு சிறிய டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டுமே பிரதான பாதையில் நகர்ந்தன.
ஈரான் நாட்டைச் சேராத சுமார் 706 டேங்கர் கப்பல்கள் தற்போது ஜலசந்தியின் இருபுறமும் வரிசையாக நிற்கின்றன. இதில் 334 கச்சா எண்ணெய் தாங்கிகள், 109 கச்சா எண்ணெய் சுத்திகரிப்புப் பொருட்கள் கொண்ட கப்பல்கள் மற்றும் 263 சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பல்கள் அடங்கும். மேலும் 26 கப்பல்கள் சரியான இலக்கின்றி வளைகுடா பகுதிக்குள் மிதக்கின்றன.
ஓமன் வளைகுடாவிலும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கி உள்ளன. எண்ணெய் சந்தையில் இதன் தாக்கம் உடனடியாகப் பிரதிபலித்தது. சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கத்தாரின் எல்என்ஜி ஆலை மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 10% உயர்ந்து ஒரு பேரல் 80 டாலராகவும், ஐரோப்பிய எரிவாயு விலை 40%-க்கும் அதிகமாகவும் உயர்ந்தது.
இந்த முடக்கம் சில நாட்களுக்குத் தொடர்ந்தால், கப்பல்களின் வரிசை அதிகரிக்கும் மற்றும் விநியோகம் முற்றிலும் சீர்குலையும். வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகை ஏற்கெனவே பலமடங்கு உயர்ந்துள்ளது. இது உலகளாவிய எரிபொருள் விலையில் பெரும் உயர்வை ஏற்படுத்தும்.