

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தின் ஸ்ரீ சீனிவாசன் நியமிக்கப்படவுள்ளார். இந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டால் முதல் இந்தியர் என்ற பெருமை பெறுவார்.
இந்தியாவின் சண்டிகரில் பிறந்த ஸ்ரீ சீனிவாசனின் (48) பெற்றோர், கடந்த 1960களில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தனர். அமெரிக்காவிலேயே பட்டப்படிப்பை முடித்து கீழ்நீதிமன்றத்தில் தனது வாழ்க்கையை தொடங்கிய சீனிவாசன் தற்போது அந்நாட்டின் 2வது பெரிய நீதிமன்றமான கொலம்பியா சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இதன் மூலம் அந்த பதவிக்கு வந்த முதல் அமெரிக்க இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
தவிர அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றி திருமண சட்ட வழக்கை திறம்பட நடத்தியவர் என பெயரெடுத்தவர். அண்மையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற நீதிபதி ஆன்டோனின் ஸ்காலியா உயிரிழந்ததை அடுத்து, காலியாகவுள்ள நீதிபதி பதவிக்கான பட்டியலில் சீனிவாசனின் பெயர் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக அவரை அதிபர் ஒபாமா விரைவில் நியமிக்கக்கூடும் என தெரிகிறது.
அதே சமயம் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருவதால், காலியாகவுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதியின் பதவியை புதிய அதிபர் தான் நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும் பதவி முடிவதற்கு முன்பாக, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஒபாமா உறுதியுடன் இருப்பதால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழரும், இந்தியருமான ஸ்ரீ சீனிவாசன் விரைவில் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சீனிவாசனின் தாயார் சென்னையை சேர்ந்தவர். தந்தை திருநெல்வேலியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.