

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மனித உரிமை மீறல், இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் போன்றவை அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “இந்த கரோனா காலம் சமநிலையற்ற போக்கை அனைத்துத் துறைகளிலும் உருவாக்கியுள்ளது. சமூகத்தில் பலவீனமானவர்கள் மேலும் பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கால் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மேலும், மனித உரிமை மீறல், இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் போன்றவை அதிகரித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கும் கரோனாவால் பல நாடுகளில் வறுமையும், வன்முறையும் அதிகரித்துள்ளன.
ஏமன், ஆப்கானிஸ்தான், காங்கோ போன்ற உள்நாட்டில் போர் நிலவும் நாடுகளில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவத்தின் அடக்குமுறையால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகிறார்கள். பலர் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வடகொரியாவில் மக்கள் மீதான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.
மேலும், உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான் வன்முறைகளும் அதிகரித்து வருவதை ஐ.நா. சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டுக் கவலை தெரிவித்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியமும் கருத்து தெரிவித்துள்ளது.