வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: புதின்

வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: புதின்

Published on

வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு வந்து தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பொருளாதாரக் கூட்டம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, “ரஷ்யாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அனைத்து ரஷ்யர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட எவரும் உயிரிழக்கவில்லை.

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன. ஸ்புட்னிக் கரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இதன் காரணமாக உலக நாடுகள் கரோனா தடுப்பூசியைச் செலுத்த தீவிரம் காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in