அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் உட்பட 8 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அங்கு ரயில் பாதை பராமரிப்பாளராக வேலை செய்து வந்த சாமுவேல் கேஸிடி (57), தனது பணியை முடித்துவிட்டு பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக அலுவலக அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட அவர், ரயில் நிலையத்தில் இருந்த மற்ற அலுவலகங்களுக்கும் சென்று அங்குள்ளவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தக் கொடூர சம்பவத்தில், மெட்ரோ ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞரான டப்தேஜ்தீப் சிங் (36) உட்பட 8 ரயில்வே ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மற்றொரு ஊழியர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது, டப்தேஜ்தீப் சிங் தனது ஓய்வு அறையில் இருந்துள்ளார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும், தனது அறையில் இருந்து வெளியே வந்த அவர், அங்கிருந்த பயணிகளை எச்சரித்து பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பினார். அப்பொழுதுதான், அவர்மீது குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஒருவேளை, தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் அறையிலேயே இருந்திருந்தால், பல பயணிகள் இந்நேரம் உயிரிழந்திருப்பார்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர். டப்தேஜ்தீப் சிங்குக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in