

இந்தியாவின் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்புத் தலைவர் ஹன்ஸ் கூறும்போது, “கரோனா புதிய அலை உருவாகும் சூழலில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது. அதுவும் கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்தும்போது மக்கள் கூட்டங்களைத் திரளாகச் சேர அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எங்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இதை உணர்வது அவசியமாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
B.1.617 எனப்படும் இந்தியாவின் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மூன்றாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துள்ளதால அந்நாடுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.