

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,076 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 3,076 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவுக்கு இதுவரை 3,89,492 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே பிரேசிலில் கரோனா பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு தொற்று மற்றும் பலி எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.