

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 14 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் பெண் தீவிரவாதி தஸ்பீன் மாலிக் இந்தியாவுக்கும் சென்றுள்ளார் என்று அந்த நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பெர்னார்டினோ நகரில் பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் ஓர் ஆணும் பெண்ணும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர்.
காரில் தப்பிச் சென்ற அந்த தம்பதியரை எப்பிஐ போலீஸார் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர். போலீஸ் விசாரணையில் தாக்குதல் நடத்தியவர்கள் சையது ரிஸ்வான் பரூக், அவரது மனைவி தஸ்பீன் மாலிக் என்பது தெரியவந்தது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானைச் சேர்ந்த தஸ்பீன் மாலிக்கின் (27) தந்தை சவுதி அரேபியாவில் வசித்துள்ளார். இதனால் அவர் சவுதி அரேபி யாவுக்கு அடிக்கடி சென்றுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து அவர் இந்தியாவுக்குச் சென்றுள்ளார். அவர் இந்தியாவில் எங்கெல்லாம் சென்றார், எவ்வளவு நாட்கள் தங்கியிருந்தார் என்பது குறித்து தகவல் இல்லை. தஸ்பீன் மாலிக் அமெரிக்காவில் குடியேறிய பிறகு அவரது கணவர் சையது ரிஸ்வான் பரூக் உடன் சேர்ந்து இரண்டு முறை ஆன்மிக பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
தம்பதியரின் தீவிரவாத தொடர்புகள் குறித்து எப்பிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத் துக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி இந்தியா வுக்கு வந்து வேவு பார்த்தார். இதே போல தஸ்பீன் மாலிக்கும் இந்தியா வில் வேவு பார்த்திருக்கக்கூடும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கலிபோர்னியா தாக்குதலுக்கு 2 வாரங்களுக்கு முன்பு சையது ரிஸ்வான் பரூக் வங்கிக் கணக்கில் சுமார் ரூ.20 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.