

கரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நீண்ட தூரம் உள்ளது. ஆனால், இதனை மாதங்களுக்குக் கட்டுப்படுத்தலாம் என்பது பொது சுகாதார நடவடிக்கைகளால் நிரூபணமாகி உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கெப்ரியேசஸ் கூறும்போது, “சமூகத்தில் பொருளாதாரம் முந்தைய நிலையை அடையவும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடங்கவும் நாங்களும் ஆவலாக உள்ளோம்.
ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தொற்று எண்ணிக்கை, இறப்புகளின் சரிவு இந்த வைரஸையும் அதன் வகைகளையும் நிறுத்த முடியும் என்பதைக் காட்டியது. ஆனால், இப்போதே, பல நாடுகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிகின்றன. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சில இளைஞர்கள் தங்களுக்கு வயது குறைவாக உள்ளதால் கரோனா வந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
உலகம் முழுவதும் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.