

போலந்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு இயங்கும் இந்தியத் தூதரகம் தனது அனைத்துச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “போலந்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி வரை தூதரகத்தின் அனைத்துச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவசரத் தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
போலந்தில் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44,912 பேர் பலியாகி உள்ளனர்.
உருமாறிய கரோனா வைரஸ்
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.
சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.