

கரோனா மூன்றாம் அலையில் ஜெர்மனி இருப்பதால் ஊரடங்கை மெல்ல மெல்லத்தான் நீக்க வேண்டும் என்று அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, “ ஜெர்மனியில் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை. எனினும் மூன்றாம் அலையில் ஜெர்மனி உள்ளதால் ஊரடங்கை மெல்ல, மெல்ல நீக்க வேண்டும். பிரிட்டனிலிருந்து பரவும் கரோனா வைரஸ் வேகமாக பரவுத் தன்மை கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்துல் 11,869 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெர்மனி நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
24 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஜெர்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,125 பேர் பலியாகி உள்ளனர்.
முன்னதாக, உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தை செலுத்தினால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும். எனவே ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து சென்றய வேண்டும் என்றும் மெர்க்கல் கேட்டுக் கொண்டார்.
சீனாவை தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன