

கரோனா வைரஸ் முதலில் பரவியதாகக் கருதப்படும் வூஹான் சந்தையில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழு ஆய்வு மேற்கொண்டது.
கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானக் குழு சீனாவுக்குச் சென்றது.
இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை வூஹான் சந்தையில் மருத்துவக் குழு ஆய்வு நடத்தியுள்ளது என்றும், மேலும் முதலில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட மருத்துவமனைகளிலும் இக்குழு ஆய்வு செய்தது என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆய்வுக்குப் பின் உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழு அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை.
முன்னதாக, பலத்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே வூஹானின் ஆய்வகத்திலிருந்து கரோனா பரவவில்லை. உலகின் பல இடங்களில் கரோனா பரவல் நிகழ்ந்துள்ளது என்று சீனா விளக்கமளித்தது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.கரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நாடுகளில் போடப்பட்டு வருகிறது.