

சீனாவில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் குறிப்பாக ஹூபே மாகாணத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “சீனாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஹூபே மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளூரிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஹூபே மட்டுமல்லாமல், சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல் தடுப்பூசிக்கு சீனா அனுமதி அளித்தது. முன்னதாக, மருத்துவப் பணியாளர்கள் உட்பட சிறிய குழுவுக்கு 3 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அவசர காலப் பயன்பாட்டுக்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் தொற்று ஏற்படும் அபாயம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து இலவசம் என்று சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் கரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் துருக்கி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் அகிய நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்தா பரவியதா? என்பதைக் கண்டறிய உலக சுகாதார விஞ்ஞானிகள் குழு சீனாவுக்கு வருகை தந்துள்ளது.