இங்கிலாந்து ராணி, இளவரசருக்கு கரோனா தடுப்பு மருந்து

இங்கிலாந்து ராணி, இளவரசருக்கு கரோனா தடுப்பு மருந்து
Updated on
1 min read

இங்கிலாந்து ராணி, அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகிய இருவரும் கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து இங்கிலாந்து ஊடகங்கள் தரப்பில், “94 வயதான இங்கிலாந்து ராணி எலிசபெத், 99 வயதான இளவரசர் பிலிப் ஆகிய இருவருக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இருவரும் நலமாக இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்து ராணி மற்றும் இளவரசருக்குச் செலுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை.

பிரிட்டனில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், வயதானவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in