

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,77,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,77,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச கரோனா தொற்று இதுவாகும்.
அமெரிக்காவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,50,000 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிப்போர்னியா. புளோரிடாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தடுப்பு மருந்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு கல்லறைகளில் இடமில்லாமல் நாட்கணக்கில் கரோனாவினால் உயிரிழந்தவர்கள் உடல்கள் காத்திருக்கும் சோகம் நடந்து வருகிறது.
ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
மேலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்று வருகின்றனர்.