புதிய வகை கரோனா: 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை

புதிய வகை கரோனா: 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை
Updated on
1 min read

புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு பயணத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “டிசம்பர் 29ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதிவரை புதிய வகை கரோனா தாக்கம் உள்ள 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு பயணத் தடை விதிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபநாட்களாக பிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாகவே பிலிப்பைன்ஸ் அரசு தொற்று பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in