

மாடர்னா நிறுவனத்திடமிருந்து சுமார் 1 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “மாடர்னா நிறுவனத்திடமிருந்து சுமார் 1 கோடிக்கும் அதிகமான மருந்துகளை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் மருந்துகள் வந்தடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடர்னா மட்டுமல்லாமல் பைசர் மற்றும் ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனங்களிடமிருந்து தடுப்பு மருந்துகளை வாங்க ஜெர்மனி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
முன்னதாக, ஜெர்மனியில் பைசர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. கிழக்கு மாகாணமான சாக்ஸானி அன்ஹால்டியைச் சேர்ந்த 101 வயது மூதாட்டிக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.