

அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் துறை தரப்பில், “அமெரிக்கா இன்று மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இன்றுடன் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் 20 லட்சத்தை எட்டத் தீர்மானித்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த வருட இறுதிக்குள் 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் கரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. மாடர்னா கரோனா தடுப்பு மருந்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மைக் பைன்ஸ், ஜோ பைடன் ஆகியோர் மக்களின் அச்சத்தைப் போக்க தாங்களாகவே முன்வந்து கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 18ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2, 50,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் ஒவ்வொரு 33 நொடிக்கும் ஒருவர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். கடந்த ஏழு நாட்களில் 18,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கலிபோர்னியா மாகாணம் மற்றும் ரோடே தீவில் புதிய கரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளன.
எனவே, மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.