

ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில் கூறப்பட்ட அறிக்கையில், “அனைத்து ஏழை நாடுகளுக்கும் 2021-ம் ஆண்டின் முதல் பகுதியில் கரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்லப்படும். இது தொடர்பாக முக்கிய மருத்துவ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கான சிறிய வெளிச்சம் தெரிவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாமை பிரிட்டன் அரசு தொடங்கியுள்ளது. பைஸர் - பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு மருந்து 95% கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சவுதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணியை தொடங்கியுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.